மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 90 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டின் வாசலில் வெயிலில் அமர்ந்திருந்தபோது, அவர் மீது கற்கள் ஏற்றி வந்த டம்பர் லாரி கவிழ்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அர்னவ் காலனியில் வசித்து வந்த கிர்ராஜ் சர்மா (90) என்ற அந்த முதியவர், வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, கட்டுமானப் பணிக்காக வந்த லாரியின் டயர் அருகில் இருந்த குழியில் சிக்கி நிலைதடுமாறியது.

அவர் அந்த இடத்தை விட்டு நகர முயன்ற போதிலும், பாரம் தாங்காமல் லாரி அவர் மீதே கவிழ்ந்ததால் கற்களுக்கு அடியில் சிக்கி அவர் பரிதாபமாகப் பலியானார்.

இந்தக் கோர விபத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில், பஹோதாபூர் போலீஸார் லாரியைப் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு இன்றிச் சாலைகளில் வாகனங்களை இயக்குவதால் நிகழும் இதுபோன்ற விபத்துகள் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.