பிரிட்டனின் ரோச்டேல் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 12 வயது சிறுமிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கொடூர பாலியல் சுரண்டல் கும்பலின் தலைவன் ஷபீர் அகமது (73), நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளால் ‘டாடி’ என்று அழைக்கப்பட்ட இவரது தலைமையிலான 9 பேர் கொண்ட கும்பல், சிறுமிகளுக்கு உணவு, சிகரெட் மற்றும் மதுபானங்களை வழங்கி, அவர்களைக் கடுமையான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியது.
இந்த வழக்கில் அவனுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அவது விடுதலை பாதிக்கப்பட்ட பெண்களிடையே பெரும் அச்சத்தையும், பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் கடுமையான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷபீர் அகமது, 1960-களின் இறுதியில் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தவர் ஆவார். இவனது கொடூரக் குற்றங்களுக்காகப் பிரிட்டன் குடியுரிமை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், தண்டனைக் காலம் முடிந்ததும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், பிரிட்டனின் 1971-ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டத்தின்படி, 1973-க்கு முன்பு அந்நாட்டிற்கு வந்த காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களை நாடு கடத்த முடியாது என்ற விதி இவனுக்குச் சாதகமாக உள்ளது. தற்போது காலில் கண்காணிப்பு வளையத்துடன், 24 மணி நேர அதிகாரிகளின் கண்காணிப்பு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள இவன், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அவனை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப் பிரிட்டன் அரசு தீவிர சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
