இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்ட நாள் முதலே எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த சூழலில், அயர்லாந்து தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் பெஞ்ச் செய்யப்பட்டதால், இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான்களே அவரை ஏன் விளையாட வைக்கவில்லை என்று கேட்கும் அளவிற்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியஅணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய, அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து வைபவ் சூர்யவன்ஷி ஓப்பனிங் களம் இறங்கினார். ஆரம்பத்தில் இரண்டு ஓவர்களில் அவருக்குப் பெரிதாகப் பந்துகளை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்காததால் அமைதி காத்த வைபவ், இங்கிலாந்தின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலேயே ஒரு பிரம்மாண்ட சிக்ஸரைப் பறக்கவிட்டு ஒட்டுமொத்த மைதானத்தையும் அலற வைத்தார்.
தொடர்ந்து ஜோஷ் டங்க் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலும் மற்றொரு சிக்ஸரை அடித்து மிரட்டிய அவர், பின்னர் வில் ஜாக்ஸ் ஓவரில் அதிரடிகாட்ட முயன்று துரதிர்ஷ்டவசமாக 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் தனது அறிமுகப் போட்டியிலேயே பயமில்லாமல் 2 அதிரடி சிக்ஸர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த 15 வயது இளம் வீரரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவதுடன், இந்த டி20 தொடரிலேயே அவர் ஒரு மிகப்பெரிய மாஸ் இன்னிங்ஸை விளையாடுவார் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
