கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் சுவர்ண விதான சவுதா அருகே உள்ள ஹலகா கிராமத்தில், குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1452 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில், குழந்தைகள் செல்போன் பயன்பாட்டிலும், பொதுமக்கள் டி.வி. பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிடுவதை கவனித்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி, இதற்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தினமும் குறிப்பிட்ட நேரம் செல்போன் மற்றும் டி.வி. பயன்பாட்டை கட்டுப்படுத்தி வருவதாக அறிந்த அவர், அதே முறையை ஹலகா கிராமத்திலும் செயல்படுத்த தீர்மானித்தார்.

இதன்படி கிராம மக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்புடன் கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே சைரன் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்கத் தொடங்கியதும், கிராம மக்கள் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் செல்போன் மற்றும் டி.வி.யை அணைத்து வைக்கின்றனர். மேலும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.