கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ராஜாராம் என்பவரது அடகு கடையில் சில தினங்களுக்கு முன்பு போலி நகைகளைக் கொடுத்து சுமார் 1.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

மீண்டும் டிசம்பர் 18-ம் தேதி போலி நகையுடன் வந்த சுதாவை கடையின் உரிமையாளர் பிடித்து வைத்துக்கொண்டார். தன்னுடைய நண்பர்கள் நால்வரை வரவழைத்த ராஜாராம், சுதாவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு கைகையாலும் கட்டையாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சுதா மயக்கமடைந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த ராஜாராம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலையில் தொடர்புடைய ராஜாராமைக் கைது செய்து மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.