தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (25). கூலி தொழிலாளியான அவர், இன்று காலை தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அதே வாலிபர்கள் அந்தப் பகுதிக்கு வந்து, சுடலைமுத்துவை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதைக் கண்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் இருவரும் அவரை விரட்டி சென்று, வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் சுடலைமுத்துவின் உறவினர்கள் அங்கு திரண்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர்கள், உடலை அங்கிருந்து எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுடலைமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
