திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.47 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் உள்ள கோயில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்காக இந்த விடுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (67), அவரது மனைவி செண்பகவல்லி (65), மகள்கள் பவானி (47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர். பின்னர், மேலும் இரண்டு நாட்கள் தங்க அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், 19-ஆம் தேதியன்றும் அவர்கள் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி பராமரிப்பாளர்கள் அந்த அறை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக மற்றவர்களின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, சாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மகள்கள் பவானி மற்றும் ஜீவா இருவரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், மூத்த மகள் பவானி திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், வயது மூப்பு காரணமாக தங்களுக்கு பிறகு தங்கள் மகள்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற மன அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நால்வரும் விஷமருந்தி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்த நால்வரின் உடல்களையும் காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.