சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை நோக்கி, அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் ஆபாசமான செய்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டார்.

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை மடக்கிப் பிடித்து கண்டித்து தாக்கியதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடமிருந்து அந்த முதியவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பெண் தூய்மை பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.