சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஷாலினி (7), மாலினி (5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மனைவி மீது சந்தேகப்பட்ட பிரகாஷ், அடிக்கடி ரத்தினம்மாளுடன் சண்டையிட்டு, தாக்கி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் ரத்தினம்மாளை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்தினம்மாள் மயங்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, ரத்தினம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, உயிரிழந்த ரத்தினம்மாளின் தாயார் நவமணி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மனைவியை அடித்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
