தஞ்சை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை அருகேயுள்ள புதுப்பட்டினம்  பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அந்த பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு, சிராஜுதீன்  நெய்வாய்க்கால் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பிரதீப் (29), தனது நண்பர்களுடன் மது போதையில் அதே பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர்களிடம் தீப்பெட்டி கேட்கப்பட்டதையடுத்து, பிரதீப் மற்றும் சிராஜுதீன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், பிரதீப் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்துச் சிராஜுதீனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிராஜுதீன், சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிராஜுதீனின் தந்தை கமாலுதீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பிரதீப்பை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிராஜுதீன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.