கோவையை அடுத்த கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜீவா (25) கடந்த ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவா, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு வசித்து வந்த நிலையில், அவரது வீட்டின் அருகே குடியிருந்த பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள், ஜீவாவை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் காயங்களுக்கான காரணம் குறித்து கேட்டபோது, ஜீவா தரப்பில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோதும், பைக்கில் இருந்து விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், மேலதிக நடவடிக்கை தேவையில்லை என்றும் எழுதி அளித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஜீவாவின் அண்ணன் மேற்கொண்ட தனிப்பட்ட விசாரணையில், பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால்தான் ஜீவா உயிரிழந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது சகோதரன் தாக்குதலால் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
சம்பவம் நடந்த பகுதி சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வாலிபர் மரணம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
