உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
ஆனால், தனது மனைவி தேவையற்ற விஷயங்களுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்வதாகவும், நிதி நெருக்கடி காரணமாகவே சங்கிலி வாங்கச் சிறிது கால அவகாசம் கேட்டதாகவும் கணவர் விளக்கமளித்துள்ளார். இந்தப் புகாரைக் கேட்டுத் திகைத்துப் போன போலீசார், வழக்குப் பதிவு செய்யாமல் தம்பதியரைத் தற்காலிகமாக ஒரு குடும்ப ஆலோசனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது இந்தத் தம்பதியினர் தங்கச் சங்கிலி விவகாரத்தால் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களைச் சமரசம் செய்ய ஆலோசகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இது போன்ற சிறிய காரணங்களுக்காகக் குடும்பங்கள் பிரிவதைத் தடுப்பதே தங்களின் நோக்கம் என்று குடும்ப ஆலோசனை மையத்தின் ஆலோசகர் பிரதிபா ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இருவரும் நல்ல வருமானம் ஈட்டும் போதிலும், ஒரு தங்கச் சங்கிலிக்காகக் காவல் நிலையம் வரை சென்ற இந்த விசித்திரமான குடும்பத் தகராறு ஆக்ரா பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
