தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மதுப் பழக்கத்திற்காக இரண்டு மாதக் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பி.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மனைவியான லட்சுமி என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், அதற்கான பணத் தேவையைச் சமாளிக்கத் தனது பச்சிளம் குழந்தையை விற்கத் திட்டமிட்டுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ரமாதேவி மற்றும் மஞ்சுளா ஆகிய இடைத்தரகர்கள் மூலம் இரண்டு லட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்ட நிலையில், கணவருக்குத் தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவான லட்சுமி, இறுதியாகப் புனேவைச் சேர்ந்த விஷால் என்ற நபருக்கு 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்குத் தனது குழந்தையை விற்றுள்ளார்.
குழந்தையையும் மனைவியையும் காணவில்லை என்று ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் அவர்களைக் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் தாய் லட்சுமி, இடைத்தரகர்கள் ரமாதேவி, மஞ்சுளா மற்றும் குழந்தையை வாங்கிய விஷால் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீட்கப்பட்ட இரண்டு மாதக் குழந்தை பாதுகாப்பாக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுப் பழக்கத்திற்காகப் பெற்ற குழந்தையையே விற்கும் அளவிற்கு மனிதநேயம் மடிந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
