கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராமமூர்த்தி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷுக்கு காங்கிரஸ் பெண் பிரமுகரான சஞ்சனா (என்கிற வனஜா) என்பவர் தொடர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான சஞ்சனா, விவாகரத்து பெற்றுத் தனியாக வசித்து வரும் நிலையில், ஆய்வாளர் சதீஷை காதலிப்பதாகக் கூறி 11-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து அவருக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
மேலும், கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி மிரட்டியதுடன், காவல் நிலையத்திற்கே பூச்செண்டுகளை அனுப்பியும் தனது காதலை வற்புறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தின் உச்சக்கட்டமாக, சஞ்சனா தனது ரத்தத்தால் எழுதிய காதல் கடிதத்தை காவல் ஆய்வாளரிடம் நேரில் வழங்கியதோடு, தனது காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் திருமணமான தனக்கு இந்தத் தொல்லைகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகத் தெரிவித்த ஆய்வாளர் சதீஷ், இது குறித்து ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சஞ்சனாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
