திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் மேரி. இந்த மூதாட்டியின் இரு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (முதியவர்) என்பவர், மேரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, மேரியிடம் அவர் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்பாராத மேரி சத்தமிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை நோக்கி வருவதை உணர்ந்த ஏழுமலை, சம்பவம் வெளியே தெரியுமோ என்ற அச்சத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து மேரியின் தலையில் தாக்கியதாகவும், தொடர்ந்து தரையில் தலையை மோதச் செய்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் மேரி கீழே விழுந்து சுயநினைவு இழந்தார்.

இதனிடையே, வீட்டின் வெளியே பொதுமக்கள் கூடத் தொடங்கியதால், ஏழுமலை வீட்டுக்குள் மறைந்திருந்தார். பின்னர் தப்பிச் செல்ல முயன்றபோது, பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மேரி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழுமலையிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பாலியல் சீண்டல் முயற்சி வெளிச்சத்துக்கு வராமல் இருக்க, கொலை செய்ததாகவும், அதனை மறைக்க மேரி அணிந்திருந்த கழுத்து மற்றும் காதில் இருந்த கவரிங் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏழுமலை மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்