பயங்கர பொருளாதார நெருக்கடி, கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் மின்சார தட்டுப்பாடு காரணமாக, இரவு 8 மணிக்கு மேல் கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களை மூட வேண்டும் என்று உத்தரவிடும் அளவிற்கு பாகிஸ்தான் கங்காளியாகிப் போயுள்ளது.
மிடில் ஈஸ்ட் நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வந்த பாகிஸ்தானுக்கு, தற்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநில எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சாங்கர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் ‘Bobi Deep-1’ என்ற இடத்தில் மிகப்பெரிய புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அரசு நிறுவனமான OGDCL நடத்திய ஆய்வில், இந்த புதிய கிணற்றில் இருந்து தினமும் 2,000 பேரல் கச்சா எண்ணெய்யும், 11 லட்சம் கன அடி இயற்கை எரிவாயுவும் உற்பத்தி செய்யத் தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஒட்டுமொத்த தினசரி தேவை 4 லட்சம் பேரல் என்பதால், இந்த புதிய கண்டுபிடிப்பு அவர்களின் தேவையில் ஒரு சிறிய பகுதிதான் என்றாலும், தற்போதைய கடுமையான பஞ்ச காலத்திற்கு இது ஒரு உயிர்காக்கும் மருந்து போல கிடைத்துள்ளது.
இன்னும் 12 முதல் 24 மாதங்களுக்குள் இந்த பகுதியில் கூடுதல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட உள்ளதால், இன்னும் எவ்வளவு பெரிய கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் ஒளிந்திருக்கிறது என்பது முழுமையாக தெரியவரும் என்று லண்டன் மற்றும் பாகிஸ்தான் பங்குச்சந்தைகளுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
