தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல் குவாரியில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் தம்பதியினர், அங்கு நிலவிய குறைந்த கூலி மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளால் வேலையை விட்டுவிட்டு கேரளாவுக்குச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவர்களை வழிமறித்த தொழிலாளர் முகவர் மற்றும் இரு சிறுவர்கள் அடங்கிய கும்பல், அவர்களை வலுக்கட்டாயமாக சிவந்திப்பட்டி காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, கணவரைத் தாக்கிவிட்டு அவர் கண்முன்பாகவே அந்தப் பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவர் மற்றும் இரு சிறுவர்களை அதிரடியாக கைது செய்துள்ளதோடு, படுகாயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.