வர்தன் சினிமாஸ் தயாரிப்பாளரும், ‘நின்னலேனோ ஹெலபேக்கு’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தன், தனது மகளுக்காக மனைவியைக் கடத்திய சம்பவம் தொடர்பாக பெட்டராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சைத்ராவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்த பிறகு குடும்பத் தகராறு காரணமாக ஹர்ஷவர்தனும், சைத்ராவும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மகளைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்த ஹர்ஷவர்தன், திட்டமிட்டு மைசூரில் தனது மனைவியைக் கடத்தி, “உன் மகள் வேண்டுமென்றால் என் மகளைக் கொடு” என்று தனது மாமியாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
நண்பர் கௌஷிக் மூலம் மனைவி சைத்ராவைத் தொடர்பு கொண்ட ஹர்ஷவர்தன், சீரியல் படப்பிடிப்புக்காக மைசூரு வருமாறு கூறி, முன்பணமாக இருபதாயிரம் ரூபாயும் கொடுத்துள்ளார். மைசூரு வந்தபோது சைத்ராவைக் கடத்தி மகளை அனுப்புமாறு அவர் கோரியுள்ளார். இந்தக் கடத்தல் பற்றி அறிந்த சைத்ராவின் சகோதரி, பெட்டராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர், தயாரிப்பாளர் ஹர்ஷவர்தனைத் தொடர்பு கொண்டபோது அவர் தனது மனைவியை விடுவித்துள்ளார். தற்போது சம்பந்தப்பட்ட அனைவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
