மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திரா நகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 90 வயது மூதாட்டி ஒருவர் அறையில் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மூதாட்டி ஷியாம் சிங் என்பவரின் மனைவி பேனி பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாலை 1 மணியளவில், அவர் தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றுள்ளனர். தகவலின் பேரில் போலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

​ஆனால், கதவை உடைத்து தீயை அணைப்பதற்குள், மூதாட்டி முற்றிலுமாக கருகி உயிரிழந்துவிட்டார். போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியின் படுக்கை அருகே ரூம் ஹீட்டர் இருந்ததும், அதன் வயர் மற்றும் ப்ளக் எரிந்து போனதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி தினமும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள ஹீட்டருக்கு அருகில் படுப்பது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கோரத் தீ விபத்து, ஹீட்டரில் இருந்து தான் தொடங்கியிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். எரிந்த நிலையில் இருந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலிசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.