ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. சமீபத்தில், நகரின் மையப்பகுதியில் ஒரு பசு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டபோது, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், கால்நடைத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து, மருத்துவர்கள் தீபக் மற்றும் ஹேமந்த் தலைமையிலான குழுவுடன் பசுவுக்குச் சிகிச்சை அளித்தனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், பசுவின் வயிற்றிலிருந்து சுமார் 52 கிலோகிராம் பிளாஸ்டிக், பாலிதீன், சுவரொட்டி துண்டுகள் மற்றும் பிற கனமான குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகள் உணவு தேடும்போது பசுவால் உட்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பசுவின் உயிர் காப்பாற்றப்பட்டது.

தற்போது அதன் நிலைமை சீராக உள்ளது. நகரங்களில் கால்நடைகளுக்கு சரியான தீவனம் கிடைக்காததாலும், குப்பைகளைத் தின்பதாலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நகரின் சுகாதாரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், விபத்து அபாயத்தையும் அதிகரிக்கிறது.

எனவே, மச்சிலிப்பட்டினம் நகரவாசிகள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள், கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் நகராட்சி ஆகியவை இணைந்து தெரு கால்நடைகளை அடையாளம் காணவும், பராமரிக்கவும், சிகிச்சை அளிக்கவும், நகரில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுவே இந்த விலங்குகளைக் காப்பாற்றவும், நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரே வழி என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.