திடீரென்று உங்கள் கண்முன் 7 அடி 2 அங்குலம் உயரமுள்ள ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தால், உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! அப்படியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லியின் பரபரப்பான சாலையில் ஒரு மிகப்பெரிய உயரமான மனிதர் நடந்து வர, அதைப் பார்த்த பொதுமக்களின் ரியாக்ஷன் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் உள்ளது. இவர் வேறு யாரும் அல்ல; பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த ஹிமான்ஷு சின்ஹா (22) என்பவர் தான்.

இவர் தன்னை இந்தியாவின் மிக உயரமான ‘உள்ளடக்கத்தை உருவாக்குபவர்’ (Content Creator) என்று கூறிக்கொள்கிறார். சமூக வலைதளங்களில் இவரை ‘தி பிக் மேன்’ அல்லது ‘பீகார் பிக் மேன்’ என்று அழைக்கிறார்கள். ​140 கிலோ எடை கொண்ட இவரை ‘தி கிரேட் காளி ஆஃப் பீகார்’ என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் ஹிமான்ஷு சென்றபோது, அவரது அசாதாரண உயரத்தைக் கண்டு பலர் வியப்படைந்தனர்.

சில பெண்கள் சற்றுப் பயந்து விலகிச் சென்றனர்; ஆனால், ஆண்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்தனர். இவர் தாஜ்மஹாலைப் பார்க்கச் சென்றபோது, அங்குப் பாதுகாப்பிலிருந்த சிஐஎஸ்எஃப் (CISF) வீரர்கள் கூட அவரது உயரத்தைக் கண்டு திகைத்த காட்சிகள் வைரலாகின. இந்த வீடியோக்களைப் பார்க்கும் நெட்டிசன்கள், “இவர் ராணுவ சீருடையில் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்”, “டான் மாதிரி இருக்கிறார்” என்று வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.