தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாகச் சொல்லி, முதலில் பலரைக் காத்திருக்க வைத்து, பிறகு பாதிப் பேரை நீக்கிவிட்டு, இப்போது மீதமுள்ள 17 லட்சம் பெண்களுக்குத் தருவதாக அறிவித்திருப்பது ஏன்? இதில் இவ்வளவு குழப்பங்களும், ஏமாற்று வேலைகளும் எதற்கு என்று பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் வரை தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்ட பெண்கள், திடீரென்று தேர்தல் நேரத்தில் மட்டும் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி, பெண்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமா? அல்லது இந்தத் திட்டத்திலும் கமிஷன் அடிக்க வேண்டும் என்ற ஆசையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

மேலும், தேர்தலுக்காகப் பணத்தாசையைக் காட்டிப் பெண்களின் வாக்குகளைப் பெற நினைக்கிறீர்களா? என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தை பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிவிட்டு, இப்போது “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று விழா எடுக்க உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? என்றும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.