சென்னை வானகரத்தில் இன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் பரபரப்பான சூழலில், அக்கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற பெரிய அரசியல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும், பிரிந்து இருக்கும் அ.தி.மு.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்” என்று வெளிப்படையாகத் தன் கருத்தைப் பதிவு செய்தார்.
அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய முடிவுகள் பொதுக்குழுவில் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித்தனியாகப் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலை மீண்டும் வரக் கூடாது என்பதே பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களின் கணிப்பு. எனவே, அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவதற்காக அமித் ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அ.தி.மு.க.வுக்கான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அவரது முதன்மை நோக்கம் என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
