உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் ரூ. 70.22 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள நெல் சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது ‘கூரையேறிக் கோழி பிடிக்காதவர் – வானத்தில் ஏறி வைகுண்டத்தைக் காட்டுவேன்’ என்பது போலாகும். அவர் தேர்தலில் நிற்கட்டும், முதலில் சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும், அதன் பிறகே புதுச்சேரிக்குச் செல்லட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய்,” என்று சாடினார்.