உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சனிக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கு ஒரு மகன் தன் தாயை அரிவாளால் கொடூரமாகக் கொலை செய்தார். கொலை நடந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, குற்றவாளி மகனே காவல் நிலையத்தில் சரணடைந்து, முழு சம்பவ விவரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்தக் கொலையின் பின்னணி ஓய்வூதியப் பணம் மற்றும் சொத்துத் தகராறு என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதின் நகர் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஃபஃப்ரானா சாலையில் உள்ள ஜனதா காலனியில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ராகுல், தன் தாய் மது, மனைவி பர்னிதா மற்றும் எட்டு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

விசாரணையில், ராகுலுக்கும் அவரது தாய்க்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தாய் மது தனக்கு வரும் ஓய்வூதியப் பணத்தைத் தன் மகள்களுக்கு அளித்து வந்ததனால் ராகுல் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். மேலும், தாய் சொத்தையும் தன் சகோதரிகளுக்கு எழுதி வைத்துவிடுவார் என்றும் அவர் சந்தேகித்துள்ளார்.

இந்தத் தகராறு காரணமாகக் கடந்த சில நாள்களாகவே வீட்டில் பெரும் பதற்றம் நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக எட்டு நாள்களுக்கு முன் இவர்களுக்குள் பெரிய சண்டை நடந்துள்ளது. இதனால், தாயும் மகனும் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, தொடர்ந்து மனக்கசப்புடன் இருந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தன் மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட ராகுல், சனிக்கிழமை மதியம் சுமார் 12:30 மணியளவில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தாயை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, இரண்டு மணி நேரம் தாயின் உடலருகே அமர்ந்திருந்த ராகுல், பின் அமைதியாக காவல் நிலையம் சென்று, “ஐயா, நான் என் தாயைக் கொன்றுவிட்டேன். உடல் வீட்டிலிருக்கிறது” என்று கூறியுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, ரத்தம் தோய்ந்த அரிவாளைக் கைப்பற்றி, ராகுலைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.