கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு காவல் நிலைய எல்லைக்குள் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி முகவர் என அடையாளம் காணப்பட்ட அஜின் என்ற அந்த இளைஞர், கடந்த புதன்கிழமை மாலை இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டியை வெறிச்சோடிய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்ற அஜின், அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மூதாட்டி சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில், உள்ளூர்வாசிகள் அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் மூதாட்டி கொடூரமாகத் தாக்கப்பட்டது மட்டுமே தெரியவந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியின் வாக்குமூலம் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களின் தகவல்கள் அடிப்படையில், போலீசார் சந்தேக நபரை அடையாளம் கண்டு, வெள்ளிக்கிழமை அன்று அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜின், உள்ளூர் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, கைது செய்யப்பட்ட அஜினின் குடும்பத்தினர் போலீசாரிடம், “அவருக்கு இதுபோன்ற தாக்குதல்களைச் செய்யும் பழக்கம் உள்ளது” என்று தெரிவித்தனர். அஜின் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், விபத்து நிகழ்ந்த பிறகு அவருக்கு இதுபோன்ற தாக்குதல் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான குற்றச்செயல் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்