“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே, இப்ப மட்டும் என்னை எப்படி தனியா விட்டுட்டு போனீங்க!” என்று மாரடைப்பால் தனது கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்குற சம்பவம் தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த செல்வராஜ் (70) என்பவர், சென்னையில் வேலை பார்த்த போது காலில் ஆணி குத்தி, சரியான சிகிச்சை அளிக்காததால் ஒரு காலை இழந்து மாற்றுத்திறனாளியான நிலையில், அவரது மனைவி சித்ரா (61) கடந்த 25 ஆண்டுகளாக அவரை வீட்டிலேயே வைத்து அன்போடு கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 4 நாட்களுக்கு முன்பு செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்களது 45 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கணவர் தன்னை எங்கும் தனியாக விட்டுச் சென்றதில்லை என்பதால் சித்ராவால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கடுமையான மன வேதனையில் வீட்டிற்கு வந்த உடனே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

45 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாக இணைந்த நிலையில், தற்போது இருவரின் உடல்களும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.