“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர், கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோரமான செய்தி கேட்டு நிலைகுலைந்து போன அவரது காதலியான முதலாண்டு கல்லூரி மாணவி, யாரிடமும் பேசாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் சகோதரர் வெளியூர் சென்றிருக்க, தாய் கேரட் அறுவடை வேலைக்காகத் தோட்டத்திற்குச் சென்ற நள்ளிரவு நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண் காதலனின் பிரிவைத் தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு இளம் உயிர்களின் மரணம் ஒட்டுமொத்த ஊட்டி மக்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.