திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வந்த பாலமுருகன் என்பவரிடம், வெண்ணிலா என்ற பெண் தன் மூன்று மகன்களுடன் வேலை செய்து வந்தார்.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெண்ணிலாவின் மூத்த மகனான சுரேஷ் என்ற சிறுவன் சரியாக ஆடு மேய்க்கவில்லை என்று கூறி பண்ணை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவனது நண்பரான வினோத் ஆகியோர் இரும்பு சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதவாறு சிறுவனின் உடலை பண்ணை வளாகத்திலேயே குழி தோண்டி புதைத்து, அதன் மேல் சிமெண்ட் தரை போட்டு மூடியுள்ளனர். இந்த கொடூரக் கொலையை வெளியில் சொல்லாமல் மறைக்க, சிறுவனின் தாயை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி வந்த வெண்ணிலா திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் முதற்கட்டமாக பண்ணை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய இருவரைக் கைது செய்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் சிமெண்ட் தரையை உடைத்து சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொலை சம்பவத்திற்கும், உடலை மறைப்பதற்கும் பாலமுருகனின் மனைவி புவனா மற்றும் அவரது 15 வயது மகள் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அந்த மேலும் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
