உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் இளம் தாய் ஒருவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிஹாரைச் சேர்ந்த ரஞ்சு குமார் என்பவருக்கும், கான்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பங்கஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்த பிறகுதான் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற வன்மத்தில் கணவன் பங்கஜ் தனது மனைவியை நாள்தோறும் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்த நிலையில், ஆத்திரமடைந்த பங்கஜ் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கியதுடன், கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அருகில் இருந்தபோதிலும், உரிய நேரத்தில் காப்பாற்றப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. நிலைமை தீவிரமடைந்த பின்னரே அவரை ஹேலட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த இளம் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மனைவி இறந்த செய்தி அறிந்ததும் கணவன் பங்கஜ் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகிவிட்டான். இதைக் கேள்விப்பட்டு கதறி துடித்து அடித்துக்கொண்டு கான்பூருக்கு விரைந்த பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமனை மற்றும் பிரேத பரிசோதனை மையத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காகவே தனது மகளை கொடூரமாகக் கொன்றுவிட்டதாகக் கூறி அவர்கள் கண்ணீர் மல்கக் கதறிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. கோவிந்த் நகர் காவல்துறையினர் இந்தச் சவக்கிடங்கு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள கொடூரக் கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
