ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், ஒரே தேதியில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவர் மூலம் பிறந்து உலக சாதனை படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நெல்லையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதபோதகர் ஜெபர்சன் – சீபா மனோஸ் தம்பதிக்கு ஜஹஸ்லேல் மனோஸ், ஜசானியா ஷரோன் மற்றும் ஜானியா செராபின் ஆகிய 3 குழந்தைகள் உள்ள நிலையில், இந்த மூவரும் முறையே 2015, 2017 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஜூன் 10-ஆம் தேதியன்றே பிறந்துள்ளனர்.
இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், 10 ஆண்டுகள் கால இடைவெளி இருந்தாலும் இந்த 3 குழந்தைகளும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரே தனியார் நர்சிங் ஹோமில் பிறந்ததுடன், இவர்களின் பிரசவத்தைப் பார்த்த டாக்டர் ரமோலாஜேனட் டயானாவின் பிறந்தநாளும் இதே ஜூன் 10-ஆம் தேதி என்பதுதான்.
இந்த அபூர்வ சுகப்பிரசவ நிகழ்வை உலக சாதனையாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், யுனிவர்சல் அச்சீவர்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகள் இதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற ஜூன் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
