உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தலித் இளைஞர் ஒருவரைச் செருப்புகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்த கட்டாயப்படுத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நவம்பர் 22-ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ, டிசம்பர் 5-ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்டவரை சிகரெட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற நிஷாந்த் சக்சேனா, சுக்ரித், கனிஷ்க் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை ஒரு வீட்டிற்குக் கடத்திச் சென்று, குத்துகள், உதைகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கியது.

“>

தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த இளைஞர் கெஞ்சிக் கொண்டிருந்தபோதும், சாதிய அவதூறுகளை வீசிய கும்பல், துப்பாக்கியை எடுத்து மிரட்டி அவரை ஆடைகளைக் கழற்றும்படி வற்புறுத்தியுள்ளது. மேலும், “நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ராஜ்கரின் ராஜா” என்று ஒருவன் ஆணவத்துடன் பேசியுள்ளான்.

இந்த கொடூர வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜான்சி போலீசார் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து, எஸ்.சி/எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூன்று குற்றவாளிகளைக் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் சக்சேனா தலைமறைவாக உள்ளதால், அவரைக் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.