“குரங்குக்குத் தெரியுமா இஞ்சியின் சுவை” என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவை குரங்குகளுக்கு மிக நன்றாகவே தெரிகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சுவாரசியமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களைப் போலவே குரங்குகளும் மாம்பழங்களை உண்ண அதிக ஆர்வம் காட்டுகின்றன.

மனிதர்களைப் போல் கடைகளுக்குச் சென்று வாங்க முடியாவிட்டாலும், தோப்புகளிலிருந்தோ அல்லது வீடுகளிலிருந்தோ எப்படியாவது மாம்பழங்களைத் திருடி, அமைதியான ஒரு இடத்தை நோக்கி இவை தஞ்சமடைந்து விடுகின்றன. அந்த வகையில், வைரலாகி வரும் வீடியோவில் குரங்கு ஒன்று இரண்டு மாம்பழங்களைத் திருடிக்கொண்டு ஒரு வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று, எவ்வித பயமுமின்றி மிகவும் ரசித்து ருசித்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

 

அப்போது அந்த வீட்டின் பெண்மணி ஒருவர் திடீரென மொட்டை மாடிக்கு வர, குரங்கு மாம்பழம் சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதனை அங்கிருந்து விரட்ட முயற்சிக்கிறார். ஆனால், பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிரும் குரங்குகளைப் போலல்லாமல், இந்த வீடியோவில் இருக்கும் குரங்கு மிகவும் குண்டாகவும், பருமனாகவும் இருப்பதால் அந்தப் பெண்ணைக் கண்டு சற்றும் பயப்படவில்லை.

மாம்பழத்தைக் கையில் வைத்தபடியே, எவ்வித அவசரமும் இன்றி மிகவும் நிதானமாகவும், ‘கெத்தாகவும்’ அந்த இடத்தை விட்டு நடந்து செல்கிறது. குரங்கின் இந்த அலட்சியமான மற்றும் வேடிக்கையான நடையை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். எக்ஸ் (X) தளத்தில் ‘@YasirHasan48798’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த மாம்பழக் குரங்கின் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.