ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பேரீச்சம்பழத்தை அவசரமாகச் சாப்பிட்டதில், அது தொண்டையில் சிக்கி தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் ஆந்திர மாநிலம் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியில் நடந்துள்ளது.
கங்காதர் (வயது 42) என்ற அந்த நபர் பேரீச்சம்பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் அவசரமாகப் பேரீச்சம்பழம் ஒன்றை முழுதாக விழுங்கியதால், அந்தப் பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், மேல் சிகிச்சைக்காக அனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கங்காதர் பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவசரமாகப் பேரீச்சம்பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட இந்த எதிர்பாராத மரணம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
