கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வந்த ஸ்ரீபிரியா (30) என்பவரை, அவரது கணவன் பாலமுருகன் (34) அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகனும், கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியாவும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், 1½ வயது மகளும் உள்ளனர். குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் பாலமுருகனின் உறவுக்கார இளைஞருக்கும் இடையே பழக்கம் உருவாகி, அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பாலமுருகன் மனைவியை கண்டித்ததால், தம்பதியினர் இடையே தகராறு அதிகரித்தது. இதையடுத்து, ஸ்ரீபிரியா 6 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்து கோவைக்கு வந்து, பின்னர் காந்திபுரம் மகளிர் விடுதியில் தங்கத் தொடங்கியுள்ளார்.

நேற்று காலை, மனைவியை மீண்டும் சேர்த்து கொண்டு செல்லலாம் என எண்ணிய பாலமுருகன், கணபதி பகுதியில் உள்ள தனது மாமா ராஜாவுடன் மகளிர் விடுதிக்கு வந்தார். வரவேற்பு அறையில் காத்திருந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிடம் “சண்டை இல்லாமல் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வோம், சொந்த ஊருக்கு வா” எனக் கேட்டாராம்.

ஆனால் ஸ்ரீபிரியா அதனை மறுத்து, “நான் இனி உங்களுடன் வர மாட்டேன்” என்று கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பாலமுருகன் அரிவாளை எடுத்து, மனைவியின் கழுத்தில் வெட்டியதாக போலீசார் கூறினர். ஸ்ரீபிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையின் பின்னர், உயிரிழந்த மனைவியின் உடலருகே அமர்ந்து செல்பி எடுத்து, அதை ஸ்டேட்டஸாக பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் போலீசாரிடம் கூறியதாவது:

“மனைவியும் உறவுக்கார இளைஞரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பார்த்ததில் மனம் உடைந்தேன்.” “மீண்டும் சேர்ந்து வாழ சமாதானம் பேச வந்தேன், ஆனால் மனைவி மறுத்ததால் ஆத்திரம் அதிகரித்தது. “கோபத்தின் உச்சியில் அரிவாளால் வெட்டி கொன்றேன்.” என்றார்.

கோவை போலீசார் கொலை வழக்கில் பாலமுருகனை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.