அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனங்களுக்கு, தவெக நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாகப் பதிலளித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:
“எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல.” “அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” “என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன்; மக்கள் தான் உண்மையான பதிலை அளிப்பார்கள்.” என்று கூறினார்.
குறிப்பாக, கோபிச்செட்டிபாளையம் பிரச்சாரத்தில் பேசும்போது, செங்கோட்டையன் தவெகவுக்கு மாறியதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியவை:
“வாக்கு கேட்க வீடு வீடாகச் சென்றவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?”
“அவரை அடையாளம் கட்டியது அதிமுக; பதவி கொடுத்ததும் அதிமுக. ஆனால் இன்று மாற்றுக் கட்சிக்குச் சென்றிருக்கிறார்.” “கட்சியின் விதிமுறைகளை மீறியதாலேயே நீக்கம் செய்யப்பட்டார்.” “2-3 ஆண்டுகளாக உள்ளிருந்தே துரோகம் செய்தவர்.” “நல்லது செய்வோருக்கு நல்லதே நடக்கும்; கெட்டது செய்பவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார். என்றார்.
மேலும் எடப்பாடியின் இந்த விமர்சனங்களுக்கு தற்போது செங்கோட்டையன் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். “என்னுடைய நிலைப்பாடு தெளிவானது, நான் என் வழியில் செல்கிறேன். மக்கள் யார் உண்மையோ, யார் அல்ல என்பதைக் கண்டுபிடிப்பார்கள்” என குறிப்பிட்டார்.
எடப்பாடி–செங்கோட்டையன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரின் வாக்குவாதமும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
