மலேசியாவில் ஒரு வங்கியின் வெளியே படுத்துத் தூங்கிய இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாதுகாவலர்களால் காலால் உதைக்கப்பட்டு மற்றும் தண்ணீர் தெளித்து அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது பயங்கரமான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சஃபியுதீன் பக்கீர் முகம்மது (39) என்ற அந்த இளைஞர், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைப் பராமரிப்பதற்காக 2024-ஆம் ஆண்டு சமையல்காரராகப் பணிபுரிய மலேசியாவுக்குச் சென்றார்.
அவர் தனது வேலை அனுமதி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக சுமார் ₹1 லட்சத்திற்கும் மேல் தனது முதலாளிக்குச் செலுத்தியுள்ளார். இருப்பினும், வேலை தொடங்கிய சில நாட்களிலேயே, ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள உணவகத்தின் முதலாளி அவருக்குச் சம்பளம் கொடுக்காமல் பல மாதங்கள் இழுத்தடித்துள்ளார். சம்பளம் மறுக்கப்பட்டதால், மனைவிக்குத் பணம் அனுப்ப முடியாமல் போன சஃபியுதீன் முகம்மது, வேலையை விட்டுவிட நினைத்துள்ளார். ஆனால், முதலாளி அவருடைய கடவுச்சீட்டையும் முடக்கி வைத்ததால், அவரால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை நிறுத்திவிட்டு, வீடற்றவராகக் கோலாலம்பூர் வீதிகளில் திரிந்துள்ளார். சேராஸில் உள்ள அம் பேங்க், தமன் மலூரி கிளையின் வெளியே அவர் தூங்கிக் கொண்டிருந்தபோதுதான், ஒரு பெண் பாதுகாவலர் குழாய் மூலம் அவர் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், அருகில் இருந்த ஒரு நடுத்தர வயது செருப்பு தைக்கும் தொழிலாளி காலால் உதைத்தும் அவரை அங்கிருந்து செல்லுமாறு அவமானப்படுத்தியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய முகம்மது, “அவர்கள் என்னைத் வெளியேறச் சொல்லி இருந்தால் நான் அமைதியாகப் போயிருப்பேன். நான் மிகவும் பலவீனமாகவும், பசியுடனும், மனச்சோர்வுடனும் இருந்தேன்” என்று மலேசிய செய்தி நிறுவனத்திடம் வருத்தம் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டோனி லியான் என்ற நபர் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். டோனி, சஃபியுதீனின் கடவுச்சீட்டைப் பெற்றுத் தரவும், அவரது கடன்களை அடைக்க நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.
