ஒரு இந்திய ஊழியர் தனது விடுமுறை விண்ணப்பத்திற்காக தனது குழுத் தலைவரிடமிருந்து  ஏற்பட்ட அளவுக்கு அதிகமான தலையீடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தீவிரமாக வைரலாகி வருகிறது. ஒரு மாதம் முன்பே வாய்மொழியாக விடுப்புக்கு ஒப்புதல் பெற்றும், முறைப்படியான மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதாக அந்த ஊழியர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடைசிக் கட்டத்தில், அவரது விமானப் பயணம் இருக்கும் நாளன்று அரை நாள் வேலைக்கு வர வேண்டும் என்று அந்த மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில், விமான நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டதால் அன்றைய தினம் வேலைக்கு வர முடியாது என்று ஊழியர் தெரிவித்தபோது, “விமானப் பயணத்தின் முழு புக்கிங் விவரங்களையும் ஆதாரமாகப் பகிர வேண்டும்” என்று மேலாளர் உடனடியாகக் கேட்டுள்ளார்.

TL demanded my flight booking as "proof" for leave. I blocked him.
byu/ImpromptuHotelier inIndianWorkplace

இதனால் சலிப்படைந்த ஊழியர், அந்த மேலாளரை உடனடியாக எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், மற்றும் அழைப்புகள் என அனைத்திலும் தடை செய்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குழுத் தலைவர் ஊழியர்களை நம்பாமல் ஆதாரம் கேட்பது மேலாண்மைத் தோல்வியே என்று அந்த ஊழியர் ஆவேசமாக தனது பதிவில் வாதிட்டுள்ளார்.

மேலும், அவர், “அணுசக்தி மைய ஊழியர்களைப் போல ஓடி இருக்கைகளுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்” என்றும், “தனிப்பட்ட கோபத்திற்காக ‘வீட்டிலிருந்து வேலை’ செய்வதை மறுத்தவர்” என்றும் தனது மேலாளரின் மற்ற தவறுகளையும் பட்டியலிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், சமூக வலைதளப் பயனாளர்கள், “தனிப்பட்ட பயணத் திட்டங்களை அவர்கள் பகிரத் தேவையில்லை” என்று கூறி, உறுதியுடன் நின்ற ஊழியரைப் பாராட்டினர். சிலர், நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதால், அனைத்து உரையாடல்களையும் எழுதப்பட்ட வடிவத்தில் ஆதாரமாகச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தினர்.

“இத்தகைய மேலாளர்கள் தங்களை காவல்துறை என்று நினைக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது அவர்கள் வேலை இல்லை” என்று மற்றொரு பயனர் காரசாரமாகக் கருத்து தெரிவித்தார்.