உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் விந்தை கலந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அமைத்திருந்த பொறிக்குள், உயிரோடு கட்டப்பட்டிருந்த ஆட்டைக் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர், தவறுதலாக அவ்வாறே கூண்டுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அந்த பகுதியில் சிறுத்தைகள் தாக்குதல் அதிகரித்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் இரண்டு சிறப்பு கூண்டுகளை அமைத்திருந்தனர். காட்டு மிருகத்தை ஈர்க்க, ஒவ்வொரு கூண்டிலும் உயிருள்ள ஆடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், மதுவில் மயக்கத்துடன் இருந்த பிரதீப் என்ற நபர், இரவு நேரத்தில் கூண்டுக்குள் இருந்த ஆட்டைக் கண்டு, அதைத் திருட முயன்றார். ஆனால், அது சிறுத்தைக்கான பொறி என்பதை புரிந்துக்கொள்ளாமல், ஆட்டுடன் கூண்டுக்குள் நுழைந்த அவர், தன்னைத்தானே பூட்டிக் கொண்டு சிக்கிக் கொண்டார்.

 

பிரதீப் இரவு முழுவதும் ஆட்டுடன் கூண்டுக்குள் அமர்ந்தபடியே இருந்தார். காலையில் வனத்துறை அதிகாரிகள் கூண்டைச் சென்று பரிசோதித்தபோது, சிறுத்தை இல்லாமல் ஒருவரே உள்ளே அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர் வெளியே விடுவிக்கப்பட்டார்.

இது பற்றி வன ஆய்வாளர் பிரஷிக்சன் வர்மா தெரிவித்ததாவது: “கூண்டில் சிக்கிய நிலையில் பிரதீப், வனத்துறையினரையும் காவல்துறையினரையும் திட்டியுள்ளார். பின்னர் அவர் ஃபக்கர்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது,” என்றார்.

இதற்கிடையில், இதே பகுதியில் சமீபத்தில் ஒரு பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பதட்டத்தில் உள்ளனர். வனத்துறை, கிராம மக்களிடம் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.