பிரபல உணவு விநியோக தளமான ‘ஸ்விக்கி’, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வினோதப் படத்தால் இணையவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தட்டில், சாதாரணமாக வடித்து வைத்த வெள்ளை சாதத்தின் மீது, உருகும் நிலையில் உள்ள சாக்லேட் ஐஸ்கிரீம் வைக்கப்பட்டு, அதை கேலி செய்யும் விதமாக, “சிறந்த இனிப்பு” என்று ஸ்விக்கி தலைப்பிட்டிருந்தது. இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது, பிலிப்பைன்ஸில் காணப்படும் “டர்ட்டி ஐஸ்கிரீம்” என்ற தெருவோர இனிப்பு வகையிலிருந்து ஈர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், சாதத்துடன் ஐஸ்கிரீமைச் சேர்த்துப் பார்ப்பது, பெரும்பாலானோருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவால் ஆத்திரமடைந்த பலர், ஸ்விக்கி நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தை நிர்வகிப்பவரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர்.

சாதத்துடன் ஐஸ்கிரீமைப் பார்த்த பல இணையவாசிகள், “பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றும், “இந்த வினோத உணவுப் போக்கை உருவாக்குபவர்களுக்கு குறைந்தது 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். “அட்மினுக்கு சிறைத் தண்டனை வழங்குங்கள்,” “இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு தலைசுற்றியது,” “நான் என் சமையலில் ஐம்பது முறை கைகளைக் கழுவும் நபர், இது போன்ற ஒன்றைச் சாப்பிடுவதை கற்பனைகூட செய்ய முடியாது” என்றெல்லாம் பலரும் கொந்தளித்து கருத்து பதிவிட்டனர்.

சிலர், இது “சமையல் நிந்தனை” என்றும், இதை உருவாக்குபவர்கள் “நேரடியாக நரகத்திற்குச் செல்வார்கள்” என்றும் எழுதினர். எனினும், ஒரு சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, இது ஒரு “ரைஸ்கிரீம்”  என்று வேடிக்கையாகவும் கருத்து தெரிவித்தனர். இதுவரை 3.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 900-க்கும் மேற்பட்ட பதில்களையும் இந்தப் பதிவு பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.