உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாம்பு கடித்து ஆபத்தான கட்டத்தில் இருந்த தம்பியை, மருத்துவர்களின் அறிவுரைப்படி அண்ணன் ஒரு மணி நேரத்தில் 150 முறைக்கு மேல் அறைந்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் முழு விவரங்களை இங்கே பார்ப்போம். அதாவது  21 வயது வாலிபர்  அரூன். இவர் தனது அண்ணன் ஆகாஷின் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வைக்கோல் சாக்கை அள்ள முயன்றபோது, அதற்குள் பதுங்கியிருந்த விஷப்பாம்பு ஒன்று அரூனை கடித்துள்ளது. சிறிது நேரத்தில் விஷம் ஏறத் தொடங்கியதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைக் கண்ட அவரது அண்ணன் ஆகாஷ், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். வழியில் சிவம் சர்மா என்ற மருத்துவக் கடை உரிமையாளரின் உதவியோடு அரூனை மோட்டார் சைக்கிளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரூனைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஷம் அவரது நரம்பு மண்டலத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் அரூன் கடுமையான தூக்கக் கலக்கத்திற்கும், மயக்கத்திற்கும் ஆளானார். அப்போது மருத்துவர்கள் குடும்பத்தினரிடம், “பாம்பு கடித்தவர்கள் தூங்கினால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முடங்கி ஆபத்து ஏற்பட்டுவிடும்; அவரை எதைக் செய்தும் தூங்க விடாமல் விழித்திருக்கச் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினர்.

 

மருத்துவர்களின் பேச்சைக் காப்பாற்றும் முயற்சியாக, ஆகாஷ் தனது தம்பி மயங்கிச் செல்லும்போது எல்லாம் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேர இடைவெளியில், தம்பியை மயங்க விடாமல் இருக்க ஆகாஷ் அவரை 150 முறைக்கும் மேல் அடித்து  அறைந்து விழித்திருக்க வைத்துள்ளார்.

மருத்துவர்களும் உடனடியாகச் செயல்பட்டு அரூனுக்கு 15  விஷ முறிவு ஊசிகளைச் செலுத்தினர். விஷம் உடலெங்கும் பரவியிருந்த நிலையில், தொடர் மருத்துவ சிகிச்சையும், அண்ணனின் தீவிர முயற்சியும் இணைந்து அரூனின் உயிரைக் காப்பாற்றியது. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சையுடன் மீண்டு வருகிறார்.