ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையாகி, கடனில் சிக்கியதால் நகைகள் மற்றும் தனது சர்வீஸ் துப்பாக்கியை அடகு வைத்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த பானுபிரகாஷ் என்பவர், தெலங்கானாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பேட்ச்சில் எஸ்ஐ-ஆகத் தேர்வாகி, சமீபத்தில் அம்பர்பேட்டை காவல் நிலையத்தில் துப்பறியும் பிரிவில் பணியாற்றினார்.
கடந்த சில நாட்களாக, இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால் பலரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடனை அடைக்க முடியாததால், காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் மீட்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 சவரன் நகைகளைத் திருடி விற்றுள்ளார்.
ஆனாலும் கடனை முழுவதுமாக அடைக்க முடியாததால், தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியையும் ஒரு தனிநபரிடம் அடமானம் வைத்து கடன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ஆந்திராவில் நடந்த குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட சமூக நல அதிகாரியாகப் பணி கிடைத்ததால், எஸ்ஐ பணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டு இன்ஸ்பெக்டரிடம் அவர் விண்ணப்பித்தார்.
அப்போது, லத்தி மற்றும் பேட்ஜ் போன்றவற்றை ஒப்படைத்தவர், துப்பாக்கி பற்றிக் கேட்டபோது, அது மேஜையில் இருந்து காணாமல் போய்விட்டதாகவும், தோட்டாக்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால், பானுபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
