தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குராவ் மண்டலத்திற்கு உட்பட்ட நெராடா புறநகர்ப் பகுதியில் நெஞ்சைப் பதறவைக்கும் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மஞ்சியாதண்டா பகுதியைச் சேர்ந்த பானோத்து மது – அருணா தம்பதியரின் 7 வயது மகன் ககன் விஹாரி, கடந்த திங்கட்கிழமை மாலை தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகில் இருந்த சுவரின் இடுக்கிலிருந்து திடீரென வெளியேறிய ஒரு விஷப்பாம்பு, சிறுவனை எதிர்பாராத விதமாகக் கடித்தது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், பதற்றமடைந்து சற்றும் தாமதிக்காமல் அவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்தபோதிலும், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
விளையாடிக் கொண்டிருந்த தங்களின் செல்ல மகன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்ததால், அந்தப் பெற்றோர் நிலைகுலைந்து போயினர். மகனைப் பறிகொடுத்த ஆத்திரத்திலும், எல்லையற்ற துக்கத்திலும் இருந்த தந்தை மது, தனது மகனின் உயிரைப் பறித்த அந்த விஷப்பாம்பை சும்மா விடக்கூடாது என முடிவு செய்தார்.
மேலும் வீட்டின் அருகே மறைந்திருந்த அந்தப் பாம்பைத் தேடிப் பிடித்து, ஆக்ரோஷமாக அடித்துக் கொன்று தனது மகனின் மரணத்திற்குப் பழிவாங்கினார். பெற்ற மகனைக் கொன்ற பாம்பைத் தந்தையே தேடிப் பிடித்து அடித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
