டம்புள்ளாவில் நடந்த இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை, 15 வயதே ஆன இந்திய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு புதிய சவாலாக மாறியுள்ளது. இப்போட்டியில் போதிய வெளிச்சம் இல்லாததால் சூப்பர் ஓவர் நடத்த நடுவர்கள் தயங்கியபோது, இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா அதை நடத்தியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தினார். ஆனால், சூப்பர் ஓவரில் இலங்கை 16 ரன்கள் குவிக்க, இந்தியா 9 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது. இதனால் ஏமாற்றமடைந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சூர்யான்ஷ் ஷெட்ஜே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அப்போது இலங்கை வீரரான 21 வயது விஷேன் ஹலம்பாகே, இந்திய அணியின் பிடிவாதத்தைக் கேலி செய்யும் விதமாக நக்கல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஷெட்ஜே தனது பேட்டைக் காட்டி எச்சரிக்க, சூர்யவன்ஷி பின்னோக்கிச் சென்று ஹலம்பாகேவை ஆக்ரோஷமாகத் தள்ளியதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பெயர் போன இலங்கை முன்னாள் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா, இருவரையும் தடுத்துச் சமாதானப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்துள்ள சூர்யவன்ஷி, இன்னும் 15 வயது சிறுவன் என்பதால் இந்தத் தொடரில் அவரது தந்தையும் அவருடன் பயணித்துள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் அண்டர்-19 அணிக்கு எதிரான போட்டியிலும் இது போன்ற மோதலில் ஈடுபட்டு, பின்னர் சூர்யவன்ஷி மன்னிப்பு கேட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் அளவுக்குப் பெரும் திறமைசாலியான சூர்யவன்ஷிக்கு, எதிர்காலத்தில் எதிரணிகள் இதுபோன்ற ‘ஸ்லெட்ஜிங்’ (வார்த்தை மோதல்) மூலம் நெருக்கடி கொடுக்க முயல்வார்கள் என்பதால், அவர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். திறமையான ஒரு இளம் வீரர் கோபத்தால் தனது வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்பதால், பிசிசிஐ (BCCI) மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அவருக்குத் தகுந்த மனோரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.