சேலத்தில் நடந்த குடும்ப தகராறில், கணவன் மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு சுபஸ்ரீ (11), ஸ்ரீகரன் (7) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

சில நாட்களாக ரதிதேவியின் நடத்தை குறித்து கண்ணன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலடைந்த ரதிதேவி, இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, கண்ணன் பலமுறை மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவியை சமாதானப்படுத்த முயன்றாராம். இனி சந்தேகப்பட மாட்டேன், குடும்பத்தை சேர்ந்து நடத்துவோம் என்று கண்ணன் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தபோதும், ரதிதேவி சமாதானம் ஆகவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை பலமுறை குத்தியுள்ளார். கடுமையாக காயமடைந்த ரதிதேவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ஆட்டோவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ரதிதேவி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரதிதேவியை குத்திக்கொலை செய்த கணவன் கண்ணனை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.