கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக கடுமையான சளி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், சளி குறைக்க ஒரு சொட்டு மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோரும் மருத்துவரின் அறிவுரைப்படி அந்த மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால் அதிர்ச்சியாக, மருந்தை குடித்த சில நிமிடங்களில் குழந்தை திடீரென துடிதுடித்து விழுந்து உயிரிழந்தது. உடனே பெற்றோர் அழுது துடித்தபடி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தா என்ற கோணத்தில் போலீசாரும், சுகாதாரத் துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் துயரமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
