தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவபூபதி (45) எனும் பொறியாளர், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதுடன், தன் இரு மகன்களையும் கொன்ற துயரச் சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது.
சிவபூபதி தனது மனைவி பார்வதி (38) மற்றும் மகன்கள் நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (12) ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், குறிஞ்சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இருவரும் ஓசூர் சமத்துவபுரம் அரசு பள்ளியில் 9, 7 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பார்வதி கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மனமுடைந்த சிவபூபதி, தனது தம்பி சிவப்பிரகாசத்திடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “தற்கொலை செய்யப் போகிறேன்” என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் பதற்றமடைந்த சிவப்பிரகாசம் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடமான குறிஞ்சி நகர் வீட்டிற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிவபூபதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும், அருகிலுள்ள படுக்கையில் அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில், சிவபூபதி தனது உடலில் ஒட்டியிருந்த கடிதத்தில், “எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால் இந்த உலகத்தை விட்டு போகிறேன். எனது இரண்டு மகன்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்,” என எழுதியிருந்தது.
இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அதாவது சிவபூபதி, பொறியாளர் ஆன இவர் ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் இதைத் தொடங்கிய அவர், பின்னர் சென்னைக்கு சென்று ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டபோதிலும், அதை ஈடு செய்யும் நம்பிக்கையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூருக்கு குடும்பத்துடன் குடியேறினார். ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டங்களால் கடன் சுமை அதிகரித்து வந்தது.
இதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. மனைவி வீட்டை விட்டு சென்றதும், மனவேதனையில் ஆழ்ந்த சிவபூபதி, தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஓசூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
