புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (31). லாரி டிரைவராகப் பணியாற்றி வந்த இவருக்கும், சர்மிளா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. லாரி ஓட்டுநராகப் பணிபுரிவதால், ஹரிஹரசுதன் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தனது மனைவி சர்மிளாவின் பிறந்தநாளுக்காகப் புதிய செல்போன் ஒன்றை அன்பளிப்பாக வாங்கி வந்து, அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பரிசை வாங்க சர்மிளா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஹரசுதனை, அவரது தாய் மற்றும் சகோதரர் சமாதானப்படுத்தினர்.
இருப்பினும், மனவேதனை குறையாத ஹரிஹரசுதன், நேற்று அதிகாலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஹரசுதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
