சென்னை எழும்பூர் அருகே காதலியை பார்க்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பேட்டை நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். தற்போது ஒரு ‘ஜிம் மாஸ்டராக’ பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை, எழும்பூர் நரியன்காடு போலீஸ் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து ஜான் சேவியர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடுமையாக காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நரியன்காடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஒரு போலீஸ் ஏட்டுவின் 18 வயது கல்லூரி மாணவியுடன் ஜான் சேவியர் காதலில் இருந்தது தெரியவந்துள்ளது. நேற்று வீடு காலியாக இருந்த வேளையில், காதலியைச் சந்திக்க அவர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது மாணவியின் உறவினர்கள் இதைக் கண்டதும் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தில் ஜான் சேவியர் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
