மும்பையில் ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்த ஒரு மூதாட்டி எதிரே வரும் ரயிலின் மோட்டார் மேன் அறைக்குள் பெரிய கல்லை எறிவது போல் உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் அந்த மூதாட்டி கதவின் அருகில் நின்று கல்லை எறிந்து கொண்டு ஏதோ கூச்சலிட்டுக் கொண்டிருப்பது பதிவாகி இருந்தது. இதனால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து, மும்பை போலீசை டேக் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
What shud be punishment of such crimes?pic.twitter.com/fmM068E10j
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) October 16, 2025
தொடக்கத்தில் மும்பை போலீஸும் இதை மும்பையில் நடந்ததாக நம்பி, மும்பை ரயில்வே காவல்துறையிடம் விசாரணைக்கு அனுப்பியது. ஆனால் பின்னர் ரயில் ஆர்வலர்கள் மற்றும் தகவல் சரிபார்ப்பாளர்கள் வீடியோவை நுணுக்கமாக ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
வீடியோவில் காணப்படும் ரயிலின் முன்புற வடிவமைப்பு மும்பை உள்ளூர் ரயில்களுடன் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த ரயிலில் “ER” எனும் குறியீடு காணப்பட்டது. இது மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் இரயில்வேயைச் சேர்ந்தது என உறுதியாகியுள்ளது.
இதனால், இந்த சம்பவம் மும்பையில் அல்லாமல் ஈஸ்டன் ரயில்வே வலயத்திற்குள் உள்ள பகுதியில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் தற்போது சம்பவம் நடைபெற்ற துல்லியமான இடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஈஸ்டர்ன் ரயில்வே போலீசும், ஹாவ்ரா மற்றும் சீல்தா பிரிவுகளுக்கு விசாரணை உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பலர் சமூக வலைத்தளங்களில் “அந்த மூதாட்டி ஏன் இப்படிச் செய்தார்?” என குழப்பத்துடன் பதிவுகள் செய்து வருகின்றனர்.
